இணையத்தில் பரவி வரும் ‘Punch’ என அழைக்கப்படும் குட்டி குரங்கின் வீடியோ பலரையும் உருக்கியுள்ளது. அந்த வீடியோவை பார்த்து, Manchester United அணியின் முன்னாள் வீரர் ஜேவியர் ‘சிச்சாரிட்டோ’ ஹெர்னாண்டஸ் கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
என்ன அந்த வீடியோ?
‘Punch’ என பெயரிடப்பட்டுள்ள macaque வகை குட்டி குரங்கு, தாயால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில், அது பெரிய குரங்குகளிடம் பாசத்திற்காக அணுகுகிறது. ஆனால் அவை அதை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர், தனிமையில் இருக்கும் Punch ஒரு குரங்கு பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் பலருக்குத் தனிமை, நிராகரிப்பு போன்ற மனித உணர்வுகளை நினைவூட்டியதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
ஹெர்னாண்டஸ் ஏன் கண்கலங்கினார்?
தன் இன்ஸ்டாகிராம் பதிவில் “ஏன் அழுகிறாய்? அது வெறும் குரங்கு...” என்ற தலைப்புடன் வீடியோ பகிர்ந்த ஹெர்னாண்டஸ், Punch-ன் நிலையை மனிதர்களின் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
குட்டி குரங்கு ஆறுதல் தேடி சுற்றும் காட்சிகள் தன்னை ஆழமாக பாதித்ததாகவும், பலரும் வாழ்க்கையில் சந்திக்கும் தனிமை உணர்வை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதள எதிரொலி
Punch வீடியோவை பார்த்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருகட்டத்தில் அனுபவித்த தனிமையை நினைவுகூர்ந்து பலர் உணர்ச்சி வசப்படுவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
ஒரு குட்டி விலங்கின் நடத்தை உலகம் முழுவதும் மனிதர்களின் மனதை தொடுவது, சமூக வலைதளங்களின் தாக்கத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

