V. R. Muthu, Idhayam Sesame Oil நிறுவனத்தின் தலைவர், உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகரை எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நகராக மாற்றியவர்..
1953 அக்டோபர் 6ஆம் தேதி விருதுநகரில் பிறந்த V. R. Muthu, தமிழ்நாடு மட்டுமன்றி உலக அளவில் நல்லெண்ணெய் விற்பனையில் புகழ்பெற்ற Idhayam Sesame Oil குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார்.
லூஸ் எண்ணெயாக விற்கப்பட்டு வந்த நல்லெண்ணெயை 1986ஆம் ஆண்டு தனது தந்தை V. V. V. Rajendran உடன் இணைந்து ‘இதயம் நல்லெண்ணெய்’ என்ற பிராண்டாக அறிமுகப்படுத்தினார்.
அவரது தலைமையில் இதயம் குழுமம் நல்லெண்ணெய் மட்டுமின்றி ‘மந்த்ரா’ கடலை எண்ணெய் உள்ளிட்ட பல சமையல் எண்ணெய் வகைகளையும் அறிமுகப்படுத்தி, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது.
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல்
இலக்கியவாதி, பேச்சாளர் மற்றும் Rotary International அமைப்பில் தன்னார்வ தொண்டராகவும் பணியாற்றிய வி.ஆர். முத்து, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழில் நகரமான விருதுநகரை இந்தியாவில் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நகரமாக மாற்றியதில் அவரது பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும் சிறந்த தொழிலதிபருக்கான JCI உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சமையல் எண்ணெயை ஒரு வலுவான பிராண்டாக மாற்றி பொதுமக்களிடம் கொண்டு சென்ற முன்னோடியான தொழிலதிபராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.
இதயம் குழுமம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
“எங்கள் அன்புக்குரிய தலைவர் வி.ஆர். முத்து ஐயா காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு மிகுந்த துயரம். அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

